ஒரு காலத்தில் மாம்பலம் என்பது இப்போது மேற்கு மாம்பலம் என்று அறியப்படும் இடமாகத்தான் இருந்தது. 1930களில் மின்சார இரயில்கள் ஓடத் தொடங்கியபோது மாம்பலம் இரயில் நிலையத்தின் முக்கியப் பயணச்சீட்டு ஜன்னல் மேற்குப் பக்கந்தான் இருந்தது. கிழக்கு மாம்பலம் புது மாம்பலம் என்றாகி அதுவே தியாகராய நகர் ஆயிற்று. தியாகராய நகர் வளரத் தொடங்கியவுடன் பழைய மாம்பலம் - அதாவது ஒரிஜினல் மாம்பலம் - தேயத் தொடங்கியது. சென்னை கார்ப்பரேஷன் கட்சிப் பிரமுகர்கள் தலைமையில் மிக ஜரூராகப் பணியாற்றியது புது மாம்பலமாகிய தியாகராய நகர்தான். பழைய மாம்பலம் பாழ் மாம்பலமாக மாறத் தொடங்கியது. இரயில் பாதை குறுக்கிட்டது ஒரு முக்கியக் காரணம். தியாகராய நகரில் செயல்படத் தொடங்கிய பாதாளச் சாக்கடை, குழாய்த் தண்ணீர் விநியோகம் முதலியன பழைய மாம்பலத்துக்கு எளிதில் கிட்டவில்லை. துரைசாமி சாலை வழியாகத்தான் வண்டிகள் பழைய மாம்பலத்துக்குப் போக வேண்டும். வழியில் இரயில் கேட் எப்போது பார்த்தாலும் மூடிக் கிடக்கும். நான் 1952இல் சென்னைக்குக் குடி புகுந்தபோது இந்தப் பழைய மாம்பலத்தில்தான் வீடு கிடைத்தது. ரூ.28க்கு இரு அறைகள். அதில் ஒன்று மொட்டை மாடியில் ஒரு மூலையில் எழுப்பப்பட்ட சிறு கொட்டகை. மழை வெயில் இருந்தால் குடை கொண்டுதான் அதை அடைய முடியும். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் என் ஊர் தலைமை ஆசிரியர் பழைய மாம்பலம் என்றவுடன் “ஐயயோ!” என்றார். “ஏன், சார்?” “அங்கே ஒரே யானைக்கால்ப்பா!” “எனக்கு ஒண்ணும் கண்ணிலே படலியே?” “சரியாப் பாரு. யானைக்கால் இல்லாட்டா யானைக்கை. பழைய மாம்பலமும் சரி, சைதாப்பேட்டையும் சரி, உன் கை கால் ரொம்ப நாளைக்கு உன் கை காலா இருக்காது.” நான் வீடு பார்த்து முன்பணம் கொடுத்து வந்தபோது நிஜமாகவே நான் சரியாகக் கவனிக்கவில்லை. என் ஊர் சென்று என் குடும்பத்தாரையும் அழைத்துவந்த பிறகுதான் என் தலைமை ஆசிரியர் கூறியது நிஜம் என்று தெரிந்தது. அந்த 1952இல் பழைய மாம்பலத்தில் அநேகமாக மூன்றில் ஒருவருக்கு யானைக்கால், அல்லது யானைக்கை! எப்படி இல்லாதிருக்கும்? எங்கு பார்த்தாலும் சாக்கடைத் தண்ணீர். மகா மோசமான ஏரி ஒன்று. அதை ஒட்டித்தான் ஏரிக் கரைத் தெரு. மகா மோசமான குளங்கள். அதிலும் கோதண்டராம சுவாமி கோயில் குளம் விபரீதமாக இருக்கும். எங்கு திரும்பினாலும் யானைக்கால், யானைக்கை மனிதர்களுடன் நிறைய மாடுகள், பன்றிகள். பேட்டைவாசிகள் அநேகமாக எல்லாருமே கீழ்த்தரம் அல்லது கீழ் நடுத்தரம். வசித்தவர்களில் பாதிப் பேர் புரோகிதம் தரும் அற்ப வருவாயில் காலம் தள்ளுபவர்கள். இன்னொரு பாதி சமையல் தொழிலில் உதவியாளர்களாகப் பணிபுரிகிறவர்கள். இவ்வளவுக்கும் அன்று அங்கு ஒரு உணவு விடுதிகூடக் கிடையாது. காபி அல்லது டீ சாப்பிட வேண்டுமென்றால்கூட இரயில்வே கேட்டைத் தாண்டித் தி.நகர் வர வேண்டும். அன்று மாம்பலம் இரயில் நிலையத்திலும் சிற்றுண்டிச் சாலை கிடையாது. இன்னும் திடுக்கிடவைக்கும் ஒரு தகவல். 1955வரை அந்தப் பகுதியில் ஒரு வைத்தியர் கிடையாது. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்துக்கு ஏரிக்கரைத் தெருக்கோடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் ஒரு டாக்டர் கண் பார்த்து, நாக்கு பார்த்து மருந்து எழுதித் தருவார். புட்டியை எடுத்துக்கொண்டு இரயில்வே கேட் தாண்டிப் புது மாம்பலம் சென்று மருந்து வாங்கிக்கொள்ள வேண்டும். யானைக்கால் என்ன, நீர் யானைக்கால், காண்டாமிருகக் கால்கூட அங்கு வர எல்லா வசதிகளும் இருந்தன. யாராவது உயிர் விட்டால்கூட அவரை இரயில் கேட் தாண்டி எடுத்துச் சென்றுதான் கண்ணம்மாப்பேட்டையில் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும். இன்னொரு தகவல். 1955வரை அங்கு ஒரு கார்கூடக் கிடையாது! வாடகைக் கார்கூட வராது. காரணம், இரயில் கேட். ஆதலால் எழும்பூர் சென்டிரல் இரயில் நிலையத்திலிருந்து கூட ஜட்காவில்தான் அங்கு வர வேண்டும். இன்னும் ஒரு தகவல். ஒரு தெருவில் ஒன்றிரண்டு வீடுகள் தவிர இதர வீடுகளுக்கு மின்சார இணைப்பு கிடையாது. தண்ணீருக்குக் கிணறுதான். பழைய மாம்பலம் கிணறுகள் தொண்ணூறு சதவிகிதத்தில் காவி வண்ணத் தண்ணீர். எங்கோ ஒரு வீட்டுக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் குடிக்கக்கூடியதாக இருக்கும். எல்லாரும் அங்கு போய்த்தான் ஒரு குடம், இரண்டு குடம் தண்ணீர் பிடித்துக்கொண்டு வர வேண்டும். காலை நேரத்தில் ஒரு பெரிய மரப் பீப்பாயையே சக்கரம் பூட்டி மாடு கட்டி வந்து ஒருவர் சாக்கடைத் தண்ணீரை அள்ளுவார். அப்பணியில் பாதித் தண்ணீர் தெருவில் கொட்டிவிடும். நல்ல தண்ணீர் தூக்கி வரும் பெண்கள் குடம் தவலைகளிலிருந்து தெளித்து விழும் தண்ணீருடன் கலந்து தெருவெல்லாம் ஒரே சேறாக இருக்கும். இன்னும் ஒரு தகவல். அந்த நாளில் ஏரிக்கரைத் தெரு ஒன்றுதான் தார் போடப்பட்ட தெரு. வாழ்க்கை இவ்வளவு கடுமையாக இருந்தும் பழைய மாம்பலம் மிகவும் நெரிசல் மிக்க இடமாகத்தான் இருந்தது. வீட்டு வாடகை குறைவு, புறநகர் இரயில் வசதி - இவ்விரு காரணங்களுக்காக ஏழை எளியவர்கள் அங்கு குவிந்தார்கள். அன்று அங்கிருந்த ஒரே 20ஆம் நூற்றாண்டுச் சின்னம் ஒரு சினிமாக் கொட்டகை. ஆனால் அதை 2ஆம் நூற்றாண்டிலேயே கட்டிவிட்டார்களோ என்று அதன் தோற்றம் நம்மைச் சந்தேகிக்க வைக்கும். பக்தவத்சலம் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது அவர் கலந்துகொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி இந்தப் பழைய மாம்பலத்து இரயில் கேட்டை அகற்றி ஒரு சுரங்கப் பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய விழாதான். இது 1967ஆம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தேய ஆரம்பித்தது. பழைய மாம்பலம் மேற்கு மாம்பலமாகிப் புது வாழ்வு பெற்று வளரத் தொடங்கியது. இப்போது அந்தப் பழைய ஏரி சுத்தமாக இருந்த இடம் தெரியாது போய்விட்டது. குப்பை கொட்டியே அதைத் தூர்த்து அதன் மீது சாலை, வீடுகள் வந்தாயிற்று. மேற்கு மாம்பலத்தில் இன்றும் பல தெருக்கள் மிகவும் குறுகலாகத்தான் இருக்கும். ஆனால் நகரத்தின் இதர இடங்களோடு ஒப்பிடுகையில் சுத்தமாகவே இருக்கும். சென்னைக்கே முன்மாதிரியாக அங்கு ஒரு மருத்துவமனை - பப்ளிக் ஹெல்த் சென்டர் - செயல்பட்டுக் கொண்டு பொருள் வசதி குறைவான ஏராளமானவர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறது. குழாய் வசதி வந்துவிட்டது. பாதாளச் சாக்கடை போட்டாகிவிட்டது. ஆதலால் நிறைய அடுக்கு மாடிக் கட்டடங்கள். இன்றும் மோட்டார் கார்கள் நிறைய கிடையாது. ஆனால் மோட்டார் சைக்கிள்கள், மோப்படுகள் நிறைய உண்டு. பழைய புரோகிதர்களின் சந்ததியினர் இன்று பெரும்பாலும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரிகிறார்கள். பணிக்குப் போகிறவர்களில் ஆண், பெண் விகிதம் அநேகமாகச் சமமாகவே இருக்கும். இன்றும் சில புரோகிதர்கள் இருக்கிறார்கள்.
மேற்கு மாம்பலத்திலேயே பஸ் போகக்கூடிய ஒரே சாலையாகிய ஆரிய கௌடா சாலையில் உள்ள அயோத்தியா மண்டபம் அவர்கள் மாலையில் கூடும் இடம். பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் வரவில்லையே தவிர நிறைய உணவு விடுதிகள் வந்துவிட்டன. திருமணங்களுக்கு விருந்து தயாரிக்கும் பணியை ஏற்று அனைத்துத் திருமண ஏற்பாடுகளையும் செய்துதரும் நிபுணர்கள் இன்று பலர் மேற்கு மாம்பலத்தில் இருக்கிறார்கள். அடக்கமான திருமணக் கூடங்கள் நிறைய உள்ளன. பத்திரிகையாளர்கள் நிறையபேர் மேற்கு மாம்பலவாசிகள். துணை நடிகர்கள், நாடக நடிகர்களும் உண்டு. ஐம்பதாண்டு ‘அமுதசுரபி’ பத்திரிகையின் எழுபதாண்டு ஆசிரியர் விக்கிரமன் மேற்கு மாம்பலத்தின் ஆதிவாசி. நாடகாசிரியர் கோமல் சுவாமிநாதன், எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம், பாடகர்கள் ராதா-ஜெயலட்சுமி, நடிகர் நாகேஷ் எல்லாருக்கும் மேற்கு மாம்பலம் உறைவிடமாக இருந்திருக்கிறது. நாகேஷ் என்றதும் சினிமா ஞாபகம் வரும். அந்த நாளிலிருந்து இன்றுவரை மேற்கு மாம்பலத்தின் ஒரே திரைப்படக் கொட்டகை நேஷனல். இப்போது அங்கு காட்சிகள் கிடையாது. காட்சிகள் நடந்த காலத்திலும் அந்த இடத்தில் பெரிய மாறுபாடு கிடையாது. மாடுகள் அந்த இடத்தை நெருங்கும்போதே வாலைத் தூக்கிக் கொண்டுவிடும். சென்னையிலேயே இயற்கை உரம் மிக அதிக அளவு ஊறிப்போயிருக்கும் இடம் இந்த நேஷனல் கொட்டகையின் முன்புறமாக இருக்க வேண்டும். இன்னொரு விஷயம் கூற வேண்டும். பொதுவாக மளிகை சாமான்கள் மேற்கு மாம்பலத்தில் சற்று விலை குறைவு. அதிலும் சில கடைகளில் வெளியே விளம்பரப் பலகைகளைப் பார்த்தால் யாருக்கும் உற்சாகம் பெருகிவரும். ‘மிளகாய் விலையில் வீழ்ச்சி!’ ‘அரிசி ரொம்ப டவுன்!’ ‘புளி விலை படிக்குப் பாதி!’, ‘துவரம் பருப்பு பெரிய இடி!’ மேற்கு மாம்பலத்தின் காய்கறிச் சந்தையும் குறிப்பிடப்பட வேண்டியது. சென்னை எங்கிலும் பரவிவரும் அசைவ உணவு வேட்கை மேற்கு மாம்பலத்தில் இன்னும் பெரிய இடம் பிடிக்கவில்லை. இரு கோயில்கள் புராதனமானவை, அழகானவை. ஒன்று கோதண்டராமர் கோயில், இன்னொன்று காசி விசுவநாதர் கோயில். கோதண்டராமர் கோயிலை ஒட்டித் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற அகோபில மடம் நடத்தும் உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு தாழ்த்தப்பட்ட பிரிவு சிறுவர், முஸ்லிம் மாணவர் வடமொழி கற்றுப் பரிசும் பெற்றிருக்கிறார்கள். காசி விசுவநாதர் கோயிலில் ஒரு காலத்தில் தினம் உரை அல்லது கதை காலட்சேபம் இருக்கும். இன்று புராண விரும்பிகள் பி.ஆர். சோப்ராவின் ‘மகாபாரதம்’ தொலைக்காட்சித் தொடரைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறார்கள். மக்களாக ஒன்றுகூடிச் சுற்றுச்சூழலை அக்கறையுடன் பராமரிப்பது மேற்கு மாம்பலத்தின் ஒரு சிறப்பு. சேறும் சாக்கடையும் வியாதியும் தாங்க முடியாத நாற்றமுமாக இருந்த ஒரு பேட்டை இப்போது யானைக்காலை ஒழித்துவிட்டது. ‘புது’ மாம்பலம், தியாகராய நகர் தெருக்களைவிடச் சுத்தமான தெருக்களைக் கொண்டிருக்கிறது. எல்லாத் தெருக்களுக்கும் ஒழுங்காகப் பெயர்ப்பலகைகள் அமைத்து அவற்றின் மீது பல்பொடி விளம்பரமும் ‘ஆபரேஷனில்லா விரைவாதச் சிகிச்சை’ அழைப்பும் ஒட்டாதபடி கவனித்துக்கொண்டிருக்கிறது. சென்னை நகரத்தின் மிகப் பழைமையான குடியிருப்புப் பகுதிகளில் ஒன்று இன்று மேற்கு மாம்பலம் என்று அறியப்படும் மாம்பலமாகிய பழைய மாம்பலம். அது செல்வ வளம் கொழிப்பதாகவும் ஜொவலிப்பதாகவும் மாறாதபடி இருக்கலாம். ஆனால் இந்திய நகர வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் தெரியும் இடமாக இன்று திகழ்கிறது. சென்னை நகரில் அதை ஒரு நல்ல எடுத்துக்காட்டுப் பேட்டையாகக் கூறலாம்.