தி.நகரில் என் வாசம் தொடங்கிய 1948ஆம் ஆண்டில் தண்ணீர்முதல் விறகுவரை கடும் பற்றாக்குறை. விறகுக்கு ரேஷன் கார்டு இருந்தது. காபிக் கொட்டைக்கு ஒரு ரேஷன் கார்டு. அரிசி, சர்க்கரை பற்றிக் கேட்க வேண்டியதில்லை. ரங்கநாதன் தெருவில் 9 எண்ணிட்ட வீட்டில் இருந்தேன். குடிதண்ணீர் அடுத்த தெருவிலிருந்து. குளிப்பது அரை கிலோ மீட்டர் தள்ளி தாமோதர ரெட்டித் தெருவில் இருந்த ஓர் உறவினர் வீட்டில். அது நரி உலவும் இடம் என்று சொல்வார்கள். பிசாசுகளும் உலவலாம். அன்று தாமோதர ரெட்டித் தெருவிலிருந்து கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் எரியும் சடலங்களைப் பார்க்கலாம். அவை வேகும் மணத்தைச் சுவாசிக்கலாம். ஐந்தே ஆண்டுகளில் நானே தாமோதர ரெட்டித் தெருவாசியாகிவிட்டேன். சிவ-விஷ்ணு ஆலயம் ஒரு கிராமாந்தரக் கோயில் போல இருந்தது. அதன் எதிரில்தான் தி.நகர் பஸ் நிலையம். அதாவது எதிரே சாலையோரமாக 9, 10, 11, 11ஏ, 12, 13 எண்கள் தடத்தில் ஓடும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மின்சார இரயிலில் போக முடியாத இடங்களுக்குத்தான் அன்று பஸ்ஸில் போவோம். இரயிலில் கட்டணம் குறைவு. பயணமும் விரைவாக இருக்கும். ரங்கநாதன் தெருவில் மூன்றே கடைகள்: கும்பகோணம் பாத்திரக்கடை, கல்யாண் ஸ்டோர்ஸ், 9ஆம் எண் வீட்டையொட்டி ஒரு வெற்றிலை பாக்குக் கடை. ரங்கநாதன் தெருவில் நுழையும்போது இரயில் ஒலி கேட்டால் ஓடிப் போய்ப் பிடித்துவிடலாம். தெருவில் எந்த இடைஞ்சலும் இருக்காது. பயணச் சீட்டு வாங்குமிடத்திலேயே மாடிப்படி. இப்போது ரங்கநாதன் தெருவைக் கடந்து முடிப்பதற்குப் பத்து நிமிடங்களாவது வேண்டும். பயணச் சீட்டு வாங்கப் பத்திலிருந்து முப்பது நிமிடம் வரை. அப்புறம் சுமார் பத்து கடைகளையும் ஒரு நடைபாதைப் பிள்ளையார் கோயிலையும் கடந்து ஏதோ மூலையில் உள்ள மாடிப்படியை அடைய இன்னொரு பத்து நிமிடம். இப்போது பஸ் நிலையம் உள்ள இடத்தில் அப்போது ஒரு பெரிய குட்டையிருந்தது. அதில் ஆமையிருந்ததாகக் கூடச் சொல்வார்கள். நான் நிறைய எருமை மாடுகளைப் பார்த்திருக்கிறேன். குட்டையில் தண்ணீர் வற்றியிருக்கும் காலத்தில் எப்போதாவது பொதுக்கூட்டம் நடக்கும். ராஜாஜி, அண்ணா, செங்கல்வராயன், ம.பொ.சி., முத்துராமலிங்கத் தேவர், சின்ன அண்ணாமலை ஆகியோரின் உரைகளை நான் அங்குதான் கேட்டிருக்கிறேன். 1960 அளவில் சுவாமி சின்மயாநந்தா அங்கு கீதை வேள்வி என்று இருபத்தொரு நாட்கள்
உரை நிகழ்த்தினார். “என்னமாக ஆங்கிலம் பேசுகிறார்!” என்று வியந்தோர் பலர். சிலர், “என்னமாக ஆங்கிலம் பேசுகிறார்!” என்று கூச்சப்பட்டுக் கொண்டதும் உண்டு. அன்றே நல்லி கடை உண்டு. நகைக் கடைகளில் மூன்று. டி.பி. ஜுவல்லரி, ராமநாதன் கடை, ராமச்சந்திர ஐயர் கடை. காய்கறி வாங்க பாண்டி பஜார் பின்னாலிருந்த மார்க்கெட் செல்ல வேண்டும். இல்லாது போனால் இரயில் பாதை தாண்டி மேற்கு மாம்பலம் போக வேண்டும். இப்போதுள்ள மேட்லி சாலையும் துரைசாமி சாலையும் அப்போதும் மேற்கு மாம்பலத்தைத் தி.நகருடன் இணைக்கும் பாதைகள். இரண்டுக்கும் இரயில்வே கேட் இருந்தது. நன்றாக இழுத்து மூடும் கேட். ஆதலால் ஒருமுறை கேட்டை மூடிவிட்டால் யாரும் சந்து அல்லது இடுக்கில் புகுந்து இரயில் பாதையைக் கடந்து செல்ல முடியாது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் தூக்கி இறக்கும் ‘காண்ட்டிலீவர்’ கேட் போட்டார்கள். அப்போதிலிருந்து மாதத்திற்கு இரண்டு நரபலியாவது அந்த கேட்டுகள் கேட்டு வாங்கிப் பெற்றிருக்கின்றன. கற்பனையுள்ளவர்கள் அங்கு இறந்தோர் ஆவிகளைப் பார்க்கலாம். ‘கூ, சிக்கு சிக்கு’ என்று அந்த நாள் குழந்தைகள் போல ஆவிகள் இரயில் விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கும். அந்த நாளில் தி.நகருக்கு இரண்டே டாக்டர்கள். ஒருவர் அகஸ்தியர் கோயில் தெருவிலிருந்த சாரி. இன்னொருவர் உஸ்மான் சாலையில் இருந்த சாரி. இருவரும் தி.நகர்வாசிகளின் உடல்நலனை நன்கு கவனித்துக்கொண்டார்கள். கார்ப்பரேஷன் டாக்டரும் ஒருவர் உண்டு. அடிபட்டது என்று உடலின் எந்தப் பாகத்தைக் காட்டினாலும் ஊதா நிறத்தில் ஒரு மருந்தைப் பூசுவார். காயம் ஆறினாலும் அந்த நிறம் இலேசில் மாறாது. சினிமா நட்சத்திரங்கள் வசிக்கும் பூமி என்று தி.நகருக்கு அபத்தமான பெயர் உண்டு. எனக்குத் தெரிந்து மூன்று நட்சத்திரங்கள் இருந்தார்கள். டி.ஆர். ராஜகுமாரி வீடு கோடம்பாக்கம் எல்லையில் இருக்கும். என்.எஸ். கிருஷ்ணன், புஷ்பவல்லி வீடுகள் தேனாம்பேட்டை எல்லைக்கருகே இருக்கும். இருந்த ஒரு சினிமாக் கொட்டகை ராஜகுமாரி தியேட்டர். ஆரம்பத்தில் இந்திப் படங்கள்தான் அங்கு காட்டப்பட்டன. பின்னர் தமிழ்ப் படங்களும் திரையிடப்பட்டன. அதுவே ஆங்கிலம், தெலுங்கு என்று போய்க் கடைசியில் கொட்டகையே காணாமல் போய் விட்டது. ஆனால் வெகு நாட்களுக்கு அங்கு பஸ் நிறுத்தும் இடத்திற்கு ராஜகுமாரி என்றுதான் பெயர். திராவிடக் கட்சிகள் ஆட்சியில் அது ‘பவர் ஹவுஸ்’ என்று அறியப்பட்டது. இப்போது, பல்லு போனவர்களுக்குக்கூட ராஜகுமாரி பற்றிய நினைவு இருக்காது. அப்போது சேரிகள் என்று உருவாகவில்லை. கண்ணம்மாப் பேட்டையில் நிறையக் குடிசைகள் இருந்தன. ஹபிபுல்லா சாலைப் பகுதியில் ஒரு குடிசைப் பகுதி இருந்தது. தேனாம்பேட்டை திறந்த சாக்கடைப் பகுதியில் ஒரு விஸ்தாரமான குடிசைப் பகுதி. குடிசை மாற்று வாரியம் இப்போது அங்கெல்லாம் அடுக்குமாடி வீடுகள் கட்டியிருக்கிறது. தி.நகர்ப் பகுதியின் அரசியல் வேட்பாளர்களின் தலைவிதியை இப்பகுதிகள் நிர்ணயிக்கின்றன. சுமாரான பணக்காரர்கள், நடுத்தர மக்கள் வசிக்கும் இடமாக இருந்த தி.நகர் இப்போது நடுத்தர மக்கள், ஏழைகள், பரம ஏழைகள் இருக்குமிடமாகப் பரிணாமம் பெற்றுவிட்டது. இப்போது இங்கே டஜன் கணக்கில் இருக்கும் நகைக் கடைகளில் உள்ளூர்வாசிகள் வியாபாரம் மிகச் சிறிய பங்குதான். அதேபோல இன்று ரங்கநாதன் தெருவில் நிறைந்து கிடக்கும் பனியன்,
பெண்கள் உள்ளாடை, ‘ஹெட் பாண்ட்’ வியாபாரிகளுக்கும் பிழைப்பு நகரத்தின் இதர பகுதிகளிலிருந்து வந்து குவியும் நபர்களிடமிருந்துதான். அன்றிருந்த தி.நகர் பூங்காக்கள் அனைத்தும் இன்றும் இருக்கின்றன. பனகல் பூங்காவில் அந்த நாட்களில் மாலை நேரத்தில் ரேடியோ ஒலிக்கும். மாலை ஐந்தரை தொடங்கி இரவு எட்டு மணிவரை. அந்த நாளில் மிகச் சில வீடுகளில்தான் ரேடியோ உண்டு. இந்த நிலைமையை மாற்றியதற்கு வி.ஜி.பி. என்றதொரு தவணை முறை வசூல் நிறுவனம் பெரிய காரணம். தி.நகர் வாழ்க்கை பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும். அதிகம் தப்புத் தண்டாவுக்குப் போகாதவர்கள் என்று பெயர் உண்டு. ஆனால் இப்போது இங்கே கொலை, கொள்ளை, வழிப்பறி என எல்லா ஆண்-பெண் குற்றங்களும் நிகழ்ந்துவிட்டன. பேட்டை ரவுடிகள் கொலையுண்டு பிண ஊர்வலம் கண்ணம்மாப் பேட்டை திசை வரும்போது கடைகளை எல்லாம் தற்காப்புக்காக அடைத்துவிட வேண்டியிருக்கிறது. தி.நகர் சோஷியல் கிளப் என்பது அன்று அதன் காண்டீனுக்குப் பிரசித்தமானது. அங்கு தஞ்சாவூர் டிகிரி காபி கிடைக்கும். நான்கணா, அதாவது இருபத்தைந்து காசுக்குக் கள்ளிச்சொட்டுப் போல ஒரு தம்ளர் காபி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் பாண்டி பஜாரில் சாந்தா பவன் என்ற சிற்றுண்டிச் சாலை அதன் தக்காளிச் சட்னிக்காகப் பெரும் புகழ்பெற்றது. நாகர்கோயில் சுந்தர ராமசாமிவரை அதன் மணம் வீசியிருந்தது. இப்போது சரவண பவன் எல்லாப் பேட்டைகளின் எல்லாச் சிற்றுண்டிச் சாலைகளையும் பின்தள்ளிவிட்டது. ஒரே மாதிரி சாம்பார், ஒரே மாதிரி சாம்பார் வடை, ஒரே மாதிரி குளோரின் மணமுள்ள குடிதண்ணீர். குறை கூற முடியாது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், ஜார்ஜ் டவுன் வாசிகளுக்கு எப்படியோ அவர்கள் பேட்டை மீது ஒரு தனிப்பாசம் அவர்களையுமறியாமல் வளர்ந்துவிடுகிறது. கபாலீசுவரர் பார்த்தசாரதிப் பெருமாள் கருணையினால் போலும். சந்தர்ப்பம் கிடைத்தால் தி.நகர்வாசிகள் வீடு மாறிவிடுகிறார்கள். நங்கநல்லூர், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர்வரைகூடச் சென்று ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள். அவர்கள் தி.நகருக்காக ஏங்கி நான் கண்டதில்லை. அந்த விதத்தில் தி.நகர் வைராக்கியம் விளையும் பூமி.